குர்ஆன்

[01] ரமளான் மாதத்தின் நோன்பை நோற்பது கடமை

 

ஈமான் கொண்டவர்களே! உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும் (அது) விதிக்கப்பட்டுள்ளது. (அதன் மூலம்) நீங்கள் தூய்மையுடையோர் ஆகலாம். (அல்குர்ஆன் 2:183)

இஸ்லாத்தின் கடமைகள் ஐந்து! அல்லாஹ்வைத் தவிர வணங்கப்படுவதற்கு வேறு இறைவன் இல்லையென்றும், முஹம்மது (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் என்றும் சாட்சி கூறுவது, தொழுகையை நிறைவேற்றுவது, நோன்பு நோற்பது, ஜகாத் கொடுப்பது, ஹஜ் செய்வது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: புகாரி, முஸ்லிம்)

விளக்கம்: ரமளான் மாதத்தின் நோன்பு, முஸ்லிமான புத்தியுள்ள வயது வந்த ஆண் பெண் ஒவ்வொருவருக்கும் கடமையாகும். ஆனால் சிலருக்கு நோன்பை விடுவதற்கு அனுமதியிருக்கிறது. நோன்பை விடுவதற்கு அனுமதிக்கப்பட்டவர்கள் எனும் தலைப்பில் இதன் விபரங்களை பார்க்கவும்.

முஹம்மது நபி (ஸல்) அவர்களின் குணம் | இறைமொழியும் தூதர் வழியும்-03

 

நபி (ஸல்) அவர்கள் இஸ்லாத்தின் போதகராவார். இஸ்லாத்தை பயங்கரவாதமாகவும் தீவிரவாதமாகவும் சித்தரிப்பவர்கள் முஹம்மது நபியைக்
கொடூரமானவராகச் சித்தரிக்க முற்படுகின்றனர். நபி முஹம்மத் (ஸல்) அவர்கள் மாற்று மதத்தவர்களுடன் எப்படி நடந்து கொண்டார்கள் என்பது வரலாற்றில்
ஆதாரப்பூர்வமாகப் பதியப்பட்டுள்ளது. முஹம்மது நபி கொடூர குணம் கொண்டவராக இருந்ததே இல்லை.

”நபி(ஸல்) அவர்கள் மென்மையான சுபாவமுடையவராக இருந்தார்கள்” என ஆயிஷா(ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். நூல்: முஸ்லிம் 1213-137

அவர்கள் எதிலும் இலகுத்தன்மையை நேசிப்பவராகவே இருந்தார்கள். பின்வரும் நபிமொழி மூலம் இதை அறியலாம். ”இரண்டு விடயங்களில் விரும்பியதைத்
தேர்ந்தெடுத்துக் கொள்ளும்படி அல்லாஹ்வின் தூதரிடம் கூறப்பட்டால் அவர்கள் அவ்விரண்டில் இலேசானதையே அது பாவமான விடயமாக இல்லாதிருக்கும்
பட்சத்தில் எப்போதும் தேர்ந்தெடுப்பார்கள். அது பாவமான விடயமாக இருந்தால் மக்களிலேயே அதிகமாக அதிலிருந்து வெகுதொலைவில் (விலகி) நிற்பார்கள்.

இறைத்தூதர்(ஸல்) அவர்கள், தமக்காக என்று எவரையும் பழிவாங்கியதில்லை. அல்லாஹ்வின் புனித(ச் சட்ட)ம் எதுவும் சீர்குலைக்கப்பட்டு, அதற்கு பதிலாக
அல்லாஹ்வின் சார்பாகப் பழிவாங்க வேண்டுமென்று அவர்கள் விரும்பினாலே தவிர. (அப்போதும் மட்டும் பழி வாங்குவார்கள்.)”
அறி:ஆயிஸா ரழி நூல்: புஹாரி 3560, முஸ்லிம் 2327-77

மென்மையான சுபாவமும் இலகுவான போக்குமுடைய நபி(ஸல்) அவர்கள் இதே இயல்புடன்தான் மாற்று மதத்தவர்களுடன் நடந்து கொண்டார்கள்.

1. அன்பான அணுகுமுறை:

முஹம்மத் நபியை திருக்குர்ஆன் ஒரு அருளாகவே அறிமுகம் செய்கின்றது. ”(நபியே!) அகிலத்தாருக்கு அருட்கொடையாகவே அன்றி உம்மை நாம்
அனுப்பவில்லை. ” (21:107)

அகிலத்தார் அனைவர் மீதும் அவர் அன்புடையவராகவே இருந்தார். மனிதர்கள் மீது அன்பு காட்டாதவர்கள் மீது அல்லாஹ் அன்பு காட்டமாட்டான் என்பது அவரது
போதனையாகும். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: ”மனிதர்கள் மீது கருணை காட்டாதவனுக்கு அல்லாஹ் கருணைகாட்ட மாட்டான்” என ஜரீர்
இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார்கள். நூல்: புஹாரி (7376).

மனிதர்கள் மீது அன்பு காட்ட வேண்டும் எனும்போது அதில் முஸ்லிம், முஸ்லிமல்லாத அனைவரும் உள்ளடங்குவர். உயிருள்ள ஜீவன்கள் அனைத்தின் மீதும்
அன்பு காட்டுமாறும் அவர் போதித்தார். இந்த வகையில் மாற்று மதத்தவர்களுக்கும் அவர் அருள்தான். அவர்களுடனும் அவர் அன்புடனே நடந்து கொண்டார்.

2. மன்னித்தல்:

மாற்று மதத்தவர்களால் உலகில் யாருமே சந்திக்காத அளவுக்கு கொடுமைகளை நபி(ஸல்) அவர்கள் சந்தித்தார்கள். அவர் பழிவாங்கப்பட்டார். ஊரை விட்டும்
விரட்டப்பட்டார். மக்கா பள்ளியை விட்டும் தடுக்கப்பட்டார். அவரது தோழர்கள், தொடரான வன்முறைக்கு உள்ளானார்கள். இறுதியில் முஹம்மது நபி(ஸல்)
அவர்கள் மக்காவை வெற்றி கொண்டார்கள். தனக்கு முன்னால் தம்மை அழிக்கத் துடித்தவர்கள் கைகட்டி நின்று கொண்டிருந்த போது, அத்தனைப்
பேருக்கும் பொது மன்னிப்பு வழங்கினார்கள். தண்டிக்க நியாயம் இருந்தும், அதிகார பலம் இருந்தும் அத்தனைக் கொடுமைகளையும் மறந்து மன்னித்த அந்த
மாமனிதரை வன்முறையாளராகவும் கொடூரமானவராகவும் சித்தரிப்பது எவ்வளவு அநியாயமானது என்று சிந்தித்துப் பாருங்கள்.

3 . எதிரிகளுக்காகப்பிரார்த்தித்தவர்:

எதிரிகளைப் பலரும் சபிப்பார்கள். முஹம்மது நபி(ஸல்) அவர்கள் தமது எதிரிகளுக்கும் நேர்வழி கிடைக்க வேண்டும் என்று பிரார்த்தித்தவராவார். நபி(ஸல்)
அவர்களது தோழர் அபூஹுரைரா என்பவர் தனது தாய், நபி(ஸல்) அவர்களைத் திட்டித் தீர்ப்பதாகக் கூறுகின்றார். பதிலுக்கு அந்தத் தாய்க்கு நேர்வழி காட்டுமாறு
நபியவர்கள் பிரார்த்தனை செய்தார்கள். இவ்வாறு அபூஜஹ்ல் எனும் இஸ்லாத்தின் பரம விரோதிக்காகக் கூட நபியவர்கள் பிரார்த்தித்துள்ளார்கள் எனும் போது
அவர்களது அன்பு உள்ளம் எத்தகையது என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். தாயிப் நகரில் தன்னை ஓட ஓட இரத்தம் வழிந்து மயக்கம் ஏற்படுமளவுக்கு
அடித்தவர்களைக் கூட ”அழித்து விடட்டுமா?” என்ற மலக்குகளின் கேள்விக்கு சற்றும் சளைக்காமல் ”வேண்டாம்” எனக்கூறி, ”இவர்கள் இஸ்லாத்திற்கு
வராவிட்டால் கூட பரவாயில்லை; இவர்களது சந்ததிகளாவது சத்திய வழி நடக்க «வண்டும்” எ ன் று அவர்களுக்காகப் பிரார்த்தித்த உத்தம நபிதான்
முஹம்மத் நபியவர்கள்!

4. அன்பளிப்பு:

நபியவர்கள் முஸ்லிம் அல்லாதவர்களுடன் அன்பளிப்புகளைப் பரிமாறியுள்ளார்கள். முஸ்லிம் அல்லாதவர்களுக்கு அவர்கள் அன்பளிப்புகளை வழங்கியுள்ளார்கள்.
அவ ர்கள் வழங்கிய அன்பளிப் புகளை ஏற்றுள்ளார்கள். பிற சமூகங்களுடன் நல்லுறவைப் பேணும் விதத்திலேயே அவர்கள் வாழ்ந்துள்ளார்கள்என்பதையே இது
எடுத்துக் காட்டுகிறது.

5. சமூக உறவுகள்:

நபி(ஸல்) அவர்கள் முஸ்லிம் அல்லாத மக்களுடன் சராசரியான சமூக உறவைப் பேணியுள்ளார்கள். யூதர்கள் முஸ்லிம்களின் எதிரிகளாக இருந்தும்
அவர்களுடனும் நல்லுறவைப் பேணியுள்ளார்கள். யூத மூதாட்டி ஒருவர் நபி(ஸல்) அவர்களை விருந்துக்கு அழைத்தாள். நபியவர்கள் அந்த அழைப்பை ஏற்று தமது
தோழர்களுடன் சென்றார்கள். அவள் உணவில் விஷம் கலந்து கொடுத்தாள். அப்படியிருந்தும் நபியவர்கள் அவளை மன்னித்தார்கள் என்பதை அவர்களின் பரிசுத்த
வரலாற்றில் காணலாம்.

இவ்வாறே யூத சிறுவன் ஒருவன் நோயுற்ற போது சென்று அவனை நோய் விசாரித்தார்கள் என்பதை அவர்களின் வரலாற்றில் இன்னுமோர் தடமாக இருப்பதைக்
காணலாம்.

6. கொடுக்கல் வாங்கல்கள்:

யூத சமூகத்துடன் நபி(ஸல்) அவர்கள் கொடுக்கல் வாங்கல் உறவைப் பேணியுள்ளார்கள். மதீனாவின் ஜனாதிபதியாக இருந்த நபி(ஸல்) அவர்கள் அந்நாட்டின்
சிறுபான்மைச் சமூகமான யூதர்களுடன் சுமூக உறவைப் பேணியுள்ளார்கள். நபி (ஸல்) அவர்கள் யூதர்களுடன் கொடுக்கல் வாங்கலில் ஈடுபட்டுள்ளார்கள். தமது
மரணம் வரை இந்த நல்லுறவைப் பேணியுள்ளார்கள். ஆயிஷா(ரலி) அவர்கள் அறிவித்தார்கள்: தம் போர்க் கவசம் முப்பது ஸாவுகள் வாற்கோதுமைக்குப் பகரமாக
ஒரு யூதரிடம் அடகு வைக்கப்பட்டிருந்த நிலையில் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் இறந்தார்கள்.

மற்றோர் அறிவிப்பில், ”இரும்புக் கவசம்” என்றும், இன்னோர் அறிவிப்பில், ”இரும்புக் கவசம் ஒன்றை யூதரிடம் அடகு வைத்தார்கள்” என்றும் இடம்
பெற்றுள்ளது. (புஹாரி 2916)

7. முஸ்லிம் அல்லாதோருடனான உறவுகள்:

நபி(ஸல்) அவர்கள் அவர்கள் இஸ்லாத்தைப் போதித்த போது சிலர் ஏற்றனர். சிலர் மறுத்தனர். நபி(ஸல்) அவர்களின் மனைவி உம்மு ஹபீபாவின் தந்தை
இஸ்லாத்தை ஆரம்பத்தில் கடுமையாக எதிர்த்தவராவார். இந்த சூழ்நிலையிலும் முஸ்லிம் அல்லாத இரத்த உறவுகளைப் பேணும் படியும் அவர்களுக்கான
அந்தஸ்தினை வழங்கும் படியும் நபி(ஸல்) அவர்கள் போதித்தார்கள். முஸ்லிம் அல்லாதவர்களை இஸ்லாத்தை எதிர்ப்பவர்கள், இஸ்லாத்தை எதிர்க்காதவர்கள்
என இரண்டாக வகுத்து அவர்களுடன் மிக நீதத்துடனும் நியாயத்துடனும் நல்லுறவுடனும் நடந்து கொள்ளுமாறும் மார்க்கம் ஏவுகின்றது.

”எவர்கள் மார்க்க(விடய)த்தில் உங்களுடன் போரிடவில்லையோ அவர்களுக்கும், மேலும், உஙகளை உங்களது இல்லங்களை விட்டும் வெளியேற்றவில்லையோ
அவர்களுக்கும் நீங்கள் நன்மை செய்வதையும் அவர்களுடன் நீங்கள் நீதியாக நடப்பதையும் அல்லாஹ் உங்களுக்குத் தடுக்கவில்லை. நிச்சயமாக அல்லாஹ்
நீதியாக நடப்பவர்களை நேசிக்கின்றான்.” ”எவர்கள் மார்க்க(விடய)த்தில் உங்களுடன் போரிட்டு உங்களை உங்களது இல்லங்களை விட்டும்
வெளியேற்றினார்களோ அவர்களையும் மேலும், உங்களை வெளியேற்றிட உதவி செய்தார்களோ அவர்களையும் நேசத்திற்குரியவர்களாக எடுத்துக்
கொள்வதையே அல்லாஹ் உங்களுக்குத் தடுக்கின்றான். அவர்களை யார் நேசர்களாக எடுத்துக் கொள்கின்றார்களோ அவர்கள்தாம் அநியாயக்காரர்கள்.”
(60:8,9)

8. அண்டை அயலவர்கள்:

இவ்வாறே முஸ்லிம் அல்லாத அண்டை அயலவர்களுடன் மிக நல்ல முறையில் நடந்து கொள்ள வேண்டும் என்று நபி(ஸல்) அவர்கள் போதித்தார்கள். முஸ்லிம்
நாட்டில் வாழும் முஸ்லிம் அல்லாத, இஸ்லாத்தை எதிர்க்காத மாற்று மதத்தவர்களுடன் நல்ல முறையில் நடந்து கொள்ளுமாறு கூறியதுடன்
இத்தகையவர்களைக் கொலை செய்தவன் சுவனத்தின் வாடையையும் நுகர முடியாது என்றும் கண்டித்துள்ளார்கள். ”இறைத்தூதர்(ஸல்) அவர்கள்
கூறினார்கள்: (இஸ்லாமிய அரசுடன் அமைதி ஒப்பந்தம் செய்து அதன் கீழ் வாழ்ந்து வரும்) ஓர் ஒப்பந்தப் பிரஜையைக் கொன்று விடுபவன் சொர்க்கத்தின்
வாடையைக் கூட நுகர மாட்டான். அந்த நறுமணமோ நாற்பதாண்டுப் பயணத் தொலைவிலிருந்தே வீசிக் கொண்டிருக்கும்” என அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி)
அறிவித்தார்கள். (புஹாரி 3166)

இத்தகைய போதனைகளைச் செய்தவரைத் தீவிரவாதியாகச் சித்தரிக்க முடியுமா? நபியவர்கள் வெறுமனே போதிப்பவராக மட்டும் இருக்கவில்லை. தனது
போதனைகளின்படி வாழ்பவராகவும் இருந்தவராவார். நபி(ஸல்) அவர்கள் இஸ்லாத்தைக் கடைப்பிடிப்பதில் உறுதியுடன் இருந்த அதேவேளை, முஸ்லிம் அல்லாத
மக்களுடன் சுமூகமான உறவைப் பேணிய உத்தமராகவும் திகழ்ந்தார்கள். உண்மையான இஸ்லாத்தைப் பின்பற்றும் எவரும் மாற்று மதத்தவர்களுக்கு அநீதி
இழைப்பவராக இருக்க முடியாது! இஸ்லாத்தின் மீது காழ்ப்புணர்வு கொண்டவர்களே இத்தகைய தவறான சிந்தனையை பொதுமக்கள் மத்தியில் ஏற்படுத்தி
வருகின்றனர் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது.

(நன்றி மக்கள் உரிமை)

ஸக்காத் விதியாகும் பொருட்களுக்கு வருடாந்தம் ஸக்காத் கொடுக்க வேண்டுமா?

 

 

ஸக்காத் - ஸதகா

ஸக்காத் விதியாகும் பொருட்களுக்கு வருடாந்தம் ஸக்காத் கொடுக்க வேண்டுமா என்பது சம்பந்தமாக ஃபத்வாக் கோரி தங்களால் அனுப்பப்பட்ட 2004.10.27 தேதியிடப்பட்ட கடிதம் இத்தால் தொடர்புகொள்ளப்படுகிறது.

எல்லாப் புகழும் வல்ல அல்லாஹ்வுக்கே. சலாத்தும், ஸலாமும் அவனின் இறுதித் தூதர் முஹம்மத் (சல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் மீதும், அவர்களது கிளையார்கள், தோழர்கள் மீதும் உண்டாவதாக!

தங்கம், வெள்ளி, கால் நடைகள், வியாபாரப் பொருட்கள் ஆகியவற்றில் ஸக்காத் கடமையாவதற்கு (12 அரபு மாதங்களைக் கொண்ட) ஒரு வருடம் பூர்த்தியடைதலும் ஒரு நிபந்தனையாகும். மேற்படி பொருட்களில் ஒவ்வொரு வருடமும் ஸக்காத் கடமையாகும்.

இதுவே நேர்வழி பெற்ற கலீஃபாக்கள், சஹாபிகளது பொதுவான நடைமுறையாகவும் இருந்து வந்துள்ளது.

எனவே, ஒவ்வொரு வருடமும் ஸக்காத் கொடுப்பது கடமையாகும். ஸக்காத் விதியாகும் ஒரு பொருளில் வாழ்நாளில் ஒரு முறை மாத்திரம் ஸக்காத் கொடுத்தல் போதுமானதாகாது.

அல்லாஹ்வே நன்கு அறிந்தவன்.

வஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹ்.

 
 

 கொடும்பாவி எரித்தல்

 

 

பொதுவானவைகள்

கேள்வி: கொடும்பாவி எரித்தல் சம்பந்தமாக வினவி தங்களால் அனுப்பப்பட்ட 2004.05.22 தேதியிடப்பட்ட கடிதம் இத்தால் தொடர்பு கொள்ளப்படுகிறது.

எல்லாப் புகழும் வல்ல அல்லாஹ்வுக்கே. சலாத்தும், ஸலாமும் அவனின் இறுதித் தூதர் முஹம்மத் (சல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் மீதும், அவர்களது கிளையார்கள், தோழர்கள் மீதும் உண்டாவதாக!

ஒருவரது மாதிரி உருவத்தை பிடவைகள், கடதாசிகள் போன்றவற்றால் செய்யப்படுவதை கொடும்பாவி எனப்படும். இவ்வாறு உயிருள்ளவற்றின் உருவங்களை கடதாசிகளில் வரைவதையோ, கற்களில் செதுக்குவதையோ இஸ்லாம் அனுமதிக்கவில்லை. இதனைப் பின்வரும் ஹதீஸ் உறுதிப்படுத்துகின்றது:

'நான் இப்னு அப்பாஸ் (ரழியல்லாஹு அன்ஹுமா) அவர்களது சமூகத்தில் இருந்த வேளை, ஒருவர் வந்து தான் உருவப் படங்ளைச் செய்து உழைப்பதாக சொன்னார். அப்பொழுது இப்னு அப்பாஸ் (ரழியல்லாஹு அன்ஹுமா) அவர்கள், நபி (சல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் சொன்னதைத் தவிர வேறு ஒரு விடயத்தை நான் உங்களுக்கு அறிவிக்கவில்லை என்று கூறிவிட்டு, நபி (சல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் பின்வருமாறு சொன்னதை நான் செவியுற்றிருக்கின்றேன்: 'யார் உருவத்தை வரைகின்றாரோ, அவர் அவ்வுருவத்துக்கு உயிர் கொடுக்கும்  வரை அவரை அல்லாஹ் வேதனை செய்வான்.  அதற்கு அவரால் ஒரு போதும் உயிர் கொடுக்கமுடியாது' என்று சொன்னார்கள். இச் செய்தி கேட்டதும் அம்மனிதர் திகைத்து, முகம் மஞ்சனித்துப் போனார். அதைக் கண்ணுற்ற இப்னு அப்பாஸ் (ரழியல்லாஹு அன்ஹுமா) அவர்கள், உங்களுக்கு கேடு உண்டாகட்டும். நீங்கள் இதனை மறுத்தால், இதோ இருக்கக்கூடிய மரங்களை வரையுங்கள் என்று அம்மனிதனுக்குச் சொன்னார்கள்' என்று ஸஈத் இப்னு அபில் ஹஸன் (ரழியல்லாஹு அன்ஹுமா) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.  (சஹீஹுல் புகாரி, ஹதீஸ் எண் : 2225)

மாற்று மதத்தவரைத் திருமணம் முடித்து மரணித்தவரின் நிலை

சக வாழ்வும் சமூக தொடர்பும்

கேள்வி

எமது ஊரில் இஸ்லாமிய முறைப்படி பிறந்துஇ வளர்ந்துஇ வாழ்ந்து வந்த சில ஆண்களும் பெண்களும் மணம் முடித்தவர்களும், முடிக்காதவர்களும் மாற்றுமதத்தினருடன் ஓடிச் சென்று வாழ்க்கை நடத்திவருகின்றனர். இப்படி செல்பவர்கள் மணம் முடிக்காதவர்களாக இருந்தால் பள்ளி நிர்வாகிகள் என்ற அடிப்படையில் நாம் தேவையான விடயங்களை செய்வதோடு அவர்களது நிக்காஹ்வையும் செய்து வைக்கின்றோம். இருப்பினும் சிலர் இஸ்லாமியர்களைத் திருமணம் செய்து பெரிய பிள்ளைகள் இருக்கும் பட்சத்தில் கூட மாற்றுமதத்தவர்களுடன் சென்று வாழ்ந்து வருகின்றனர்.

இன்னும் சிலரோ இஸ்லாமிய முறைப்படி அந்நியர்களை மணம் முடித்து எமது ஊரில் பல வருடங்கள் வாழ்ந்து விட்டு, பிள்ளைகளும் பெரியவர்களான பிறகு தங்களது கணவர்மாரின் வற்புறுத்தலின் பெயரில் அவரது ஊருக்கு அழைத்துச் செல்லப்பட்டு மாற்றுமதக் கொள்கையிலேயே வாழ்கின்றனர். இது ஊர் மக்கள் நேரில் கண்ட உண்மையாகும். நாம் பல வழிகளில் இவர்களுக்கு இஸ்லாமிய அழைப்பு விடுத்து தஃவா கொடுத்துள்ளோம். இருந்தாலும் இவர்களின் நிலை மாறாமலேயே உள்ளது.

இது விடயம் தொடர்பாக நமது ஊர் மக்களுக்கு எழுந்துள்ள மார்க்கப் பிரச்சினையானது இதே நிலையில் இவர்கள் மரணித்தால் இவர்களது ஜனாஸாவை இஸ்லாமிய முறைப்படி நல்லடக்கம் செய்வதா? அல்லது மாற்றுமத முறைப்படி அடக்கம் செய்வதா? என்பதேயாகும். இவர்களது வாழ்க்கை மாற்றுமத முறைப்படியும் ஜனாஸா நல்லடக்கம் இஸ்லாமிய முறைப்படியும் அமைவது சரியா? என்றும் சிலர் கேள்வி எழுப்புகின்றனர்.

சிந்தித்து செயல்படவே திருக்குர்ஆன்

 

write.jpgQuranஅல்லாஹ் இம்மானிட சமுதாயத்திற்கு நேர்வழி காட்டுவதற்காக இறைக்கி வைத்த திருமறைக்குர்ஆனை எப்படி நாம் அணுக வேண்டும் என்பதை சுட்டிக் காட்டுவதே இக்கட்டுரையின் நோக்கமாகும். குர்ஆனைப் படியுங்கள் இன்னும் அதைக் கொண்டு அமல் செய்யுங்கள் அது உங்களுக்கு மறுமையில் அல்லாஹ்விடத்தில் பரிந்துரை செய்யும் என்றும் குர்ஆனில் ஒரு எழுத்தை ஓதினால் பத்து நன்மைகள் கிடைக்கும் குர்ஆனை ஓதி அதில் தேர்ச்சி பெற்றவர்கள் கண்ணியமான உயர்ந்த மலக்குகளுடன் மறுமையில் இருப்பார்கள். இப்படி குர்ஆனை ஓதுவது பற்றிய நன்மைகளை நாம் அதிகம் தெரிந்திருக்கின்றோம்.

 அதனால் குர்அனை தஜ்வீத் முறைப்படி பல தடவைகள் ஓதி முடித்தும் இருக்கின்றோம் அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்.ஆனால் குர்ஆன் இறக்கியருளப்பட்டதின் நோக்கம் இது மட்டுமல்ல, குர்ஆனை அரபு மொழியில் ஓதுவதோடு அதன் கருத்துக்களையும் உணர்ந்து, படித்து, தன் வாழ்க்கையை மாற்றிக் கொள்ள வேண்டும். அரபு மொழி தெரியாதவர்கள் தனக்குத் தெரிந்த மொழியாக்கம் செய்யப்பட்ட குர்ஆனை, மனம் அமைதிபெறும் நேரத்தில் எடுத்து, அதிலுள்ள சில வசனங்களையாவதுகருத்துணர்ந்து தன் வாழ்க்கையோடு ஒப்பிட்டுப்பார்த்து படிக்க வேண்டும்.சிந்திக்கச் சொல்லும் வசனத்தைக் கண்டால் சிந்திக்க வேண்டும், அல்லாஹ்வின் தண்டனை பற்றிய வசனத்தைக் கண்டால் அதிலிருந்து அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கேட்க வேண்டும். அல்லாஹ்வின் கண்ணியம் பற்றிய வசனம் வந்தால் அல்லாஹ்வை துதிக்க வேண்டும். அல்லாஹ்வின் அருள் மற்றும் சுவர்க்கம் பற்றி கூறப்பட்டால் அல்லாஹ்விடம் அதைக் கேட்க வேண்டும். இவ்வாறுதான் குர்ஆனை நாம் அணுக வேண்டும். இவ்வாறில்லாமல் அவசர அவசரமாக கருத்துணராமல் அரபியில் மட்டும் அல்லது மொழியாக்கத்தை வேகம் வேகமாக படித்து முடிப்பதினால் குர்ஆன் இறக்கியருளப்பட்டதின் நோக்கத்தை நாம் முழுமைப்படுத்த முடியாது. இதனால்தான் குர்ஆனை ஓதிக்கொண்டே குர்ஆனுக்கு மாறு செய்கின்றோம். குர்ஆனை ஓதிக் கொண்டே வட்டி கொடுப்பவர்களும், வாங்குபவர்களும் அதிகம் இருக்கின்றார்கள். இவ்வாறே கொலை, கொள்ளை, விபச்சாரம், ஏமாற்று என்று மாபாவச் செயல்களை செய்யக்கூடியவர்கள் நம்மில் அதிகரிக்கத்தான் செய்கின்றார்கள். இவர்கள் அனைவரும் நாள்தோறும் குர்ஆனை ஓதக்கூடியவர்கள் தான். குர்ஆனை ஓதியும் இவர்கள் இம்மாபாவச் செயல்களை விடாமலிருப்பதற்குக் காரணம், குர்ஆனை கருத்துணர்ந்து படிக்கவில்லை என்ற ஒரே காரணம்தான். குர்ஆனை கருத்துணர்ந்து, நம் வாழ்க்கையோடு ஒப்பிட்டுப் பார்த்தால் வெகு சீக்கிரத்தில் நாம் திருந்த முடியும் இன்ஷா அல்லாஹ்.

[31] ஷவ்வால் மாதத்தின் ஆறு நோன்பின் சிறப்புகள்

 

”யார் ரமளான் மாதத்தின் நோன்பை நோற்று பின்னும் அதைத் தொடர்ந்து வரும் ஷவ்வால் மாதத்தின் ஆறு நோன்பையும் நோற்கின்றாரோ (அவர்) வருடமெல்லாம் நோன்பு நோற்றதற்குச்சமம்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: முஸ்லிம்)

விளக்கம்: ஒருவர் ரமளான் மாதம் முழுவதும் நோன்பு நோற்று அதை அடுத்து வரும் ஷவ்வால் மாதத்தின் ஆறு நோன்பையும் நோற்றால் அவர் வருடம் முழுவதும் நோன்பு நோற்றவராக அல்லாஹ்விடத்தில் கருதப்படுவார். அதாவது, அல்லாஹ்விடத்தில் ஒரு நற்செயலுக்கு குறைந்தது பத்து நன்மைகள் கிடைக்கும். இந்த அடிப்படையில் ரமளான் மாத முப்பது நோன்பிற்கு முன்னூறு நன்மைகளும் ஷவ்வால் மாத ஆறு நோன்பிற்கு அறுபது நன்மைகளும் கிடைக்கும். மொத்தம் முன்னூற்றி அறுபதாகும். இதுவே ஒரு வருட நாட்களின் கிட்டத்தட்ட எண்ணிக்கையாகும். அல்லாஹ் மிகவும் நன்கறிந்தவன்.

எறும்பின் கதை [திருக்குர்ஆன் கூறும் கதைகள்-5]

 

“சுலைமான், தாவூதுக்கு வாரிசானார். அவர், ‘மனிதர்களே! பறவைகளின் மொழி எமக்குக் கற்றுத் தரப்பட்டுள்ளது. மேலும், (தேவையான) அனைத்துப் பொருட்களும் எங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. நிச்சயமாக இதுவே தெளிவான பேரருளாகும்’ எனக் கூறினார்.”

“ஜின்கள், மனிதர்கள், பறவைகள் என்பவற்றிலிருந்து சுலைமானுக்கு அவரது படைகள் ஒன்று திரட்டப்பட்டு, அவர்கள் அணியணியாக நிறுத்தப்பட்டனர்.”

“அவர்கள் எறும்புகளின் (வசிப்பிடமான) பள்ளத்தாக்கிற்கு வந்தபோது, ஓர் எறும்பு, ‘எறும்புகளே! சுலைமானும் அவரது படையினரும் தாம் உணராதவர்களாக உங்களை மிதித்துவிடாதிருப்பதற்காக உங்கள் வசிப்பிடங்களுக்குள் நீங்கள் நுழைந்து கொள்ளுங்கள்’ என்று கூறியது.”

“அதன் பேச்சினால் சிரித்தவராக புன்னகை புரிந்தார். ‘எனது இரட்சகனே! என் மீதும் என் பெற்றோர் மீதும் நீ செய்த உனது அருளுக்கு நான் நன்றி செலுத்துவதற்கும், நீ பொருந்திக் கொள்ளும் நல்லறத்தை  நான் செய்வதற்கும் நீ எனக்கு அருள் புரிவாயாக! உனது அருளால் உனது நல்லடியார்களுடன் என்னையும் இணைத்துக் கொள்வாயாக’ என்று (பிரார்த்தித்துக்) கூறினார்.”

(27:16-19)

சுலைமான் நபியுடன் சம்பந்தப்பட்ட இந்த சரித்திரத்தை எறும்பின் கதையாக சிறுவர்களுக்குப் புரிய வைக்கலாம்.

சுலைமான் நபிக்கு மகத்தான ஆட்சியை அல்லாஹ் வழங்கியிருந்தான். அவருக்கு பறவைகள், ஏனைய உயிரினங்களின் மொழியையும் அல்லாஹ் கற்றுக் கொடுத்திருந்தான் என்பதை விளக்கலாம்.

அவர் ஒருநாள் தன் படையுடன் பயணித்துக் கொண்டிருந்த போது ஒரு எறும்புக் கூட்ட ஓடையை அவர் அண்மித்தார். அப்போது ஒரு எறும்பு தனது சக எறும்புகளிடம், ‘ஓ எறும்புக் கூட்டமே! நீங்கள் உங்கள் பொந்துகளுக்குள் நுழைந்துவிடுங்கள். சுலைமானும் அவரது படையும் வந்து கொண்டிருக்கின்றனர். அவர்களை அறியாமல் அவர்கள் உங்களை மிதித்துவிடப் போகின்றார்கள்’ என்று கூறியது.

இது சுலைமான் நபிக்குக் கேட்டது! புரிந்தது! அவர் சிரித்தார். அல்லாஹ் தந்த மகத்தான ஆட்சி, அறிவுக்காக அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தினார்.

இந்த எறும்புக் கதையூடாக எறும்பின் ஒற்றுமை, உற்சாகம், சுறுசுறுப்பு, கட்டுப்பாடு, கடமையைச் செய்தல்… என்ற நல்ல பண்புகளை சிறுவர்களுக்குக் கற்றுக் கொடுக்கலாம்.

இந்த எறும்பு தனது சக எறும்புகள் அழிந்துவிடக் கூடாது என்பதில் காட்டிய அக்கறையைத் தெளிவுபடுத்தி சமூக உணர்வுடன் செயற்படுவதன் முக்கியத்துவத்தைப் புரிய வைக்கலாம்.

சுலைமான் நபிக்கு அல்லாஹ் மகத்தான ஆட்சியையும், அதிகாரத்தையும், அறிவையும், செல்வத்தையும், செழிப்பையும் வழங்கியும் கூட அவர் ஆணவம் கொண்டவராக இருக்கவில்லை. அந்த ஆட்சியையும், அதிகாரத்தையும், அறிவையும், செல்வத்தையும், செழிப்பையும், தந்தவன் அல்லாஹ்தான். இது அவன் தந்த அருள் என பணிவுடன் நடந்தார். பக்குவமாக இருந்தார். இதற்கு நான் அவனுக்கு நன்றி செலுத்த வேண்டும் என்ற நல்ல உணர்வுடன் நடந்தார். நாமும் அப்படி நடக்க வேண்டும் என்பதை உணர்த்தலாம்.

சுலைமான் நபியும் ஹுத்ஹுத் பறவையும் [திருக்குர்ஆன் கூறும் கதைகள்-6]

 

“பறவைகளை அவர் அவதானித்து, ‘எனக்கு என்ன ஆயிற்று!, “ஹுத் ஹுதை” நான் காணவில்லையே! சமுகமளிக் காதோரில் அது ஆகி விட்டதா?’ எனக் கேட்டார்.”

“நிச்சயமாக நான் அதைக் கடுமையாகத் தண்டிப்பேன். அல்லது அதை அறுத்து விடுவேன். அல்லது (சமுகமளிக்காததற்கான) தெளிவான ஆதாரத்தை அது என்னிடம் கொண்டு வர வேண்டும். (என்றும் கூறினார்.)”

“சிறிது நேரம் தாமதித்த அது (அவரிடம் வந்து), ‘நீங்கள் அறியாத ஒன்றை நான் அறிந்து, “ஸபஃ” (எனும் பிரதேசத்தி)லிருந்து உறுதியான ஒரு செய்தியுடன் உங்களிடம் வந்துள்ளேன்’ என்று கூறியது.”

“அவர்களை ஆட்சி செய்யும் ஒரு பெண்ணை நிச்சயமாக நான் கண்டேன். அவள் (தேவையான) அனைத்துப் பொருட்களும் வழங்கப்பட்டுள்ளாள். மேலும், அவளுக்கு மகத்தானதொரு சிம்மாசனமும் உள்ளது.”

“அல்லாஹ்வை விட்டுவிட்டு சூரியனுக்கு சுஜூது செய்பவர்களாக அவளையும் அவளது கூட்டத்தாரையும் கண்டேன். ஷைத்தான் அவர்களது செயல்களை அவர்களுக்கு அலங்கரித்துக் காட்டி, அவர்களை (நேர்) வழியை விட்டும் தடுத்து விட்டான். எனவே, அவர்கள் நேர்வழி பெற மாட்டார்கள்.”

“வானங்களிலும் பூமியிலும் மறைந்திருப்பவற்றை வெளிப்படுத்துகின்ற, மேலும் நீங்கள் மறைப்பவற்றையும் பகிரங்கப்படுத்துபவற்றையும் அறிகின்ற அல்லாஹ்வுக்கு அவர்கள் சுஜூது செய்ய வேண்டாமா?”

“(உண்மையாக) வணங்கப்படத் தகுதி யானவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரு மில்லை. (அவன்) மகத்தான அர்ஷின் இரட்சகனாவான்.”

“நீ உண்மை உரைத்தாயா? அல்லது நீ பொய்யர்களில் இருக்கிறாயா? என்பதை நாம் அவதானிப்போம்” என (சுலைமான்) கூறினார்.

“எனது இக்கடிதத்தை எடுத்துச் சென்று, அவர்களிடம் அதைப் போட்டு விட்டு பின்னர் அவர்களை விட்டும் ஒதுங்கி, அவர்கள் என்ன முடிவு செய்கின்றனர் என்பதைக் கவனித்துப்பார் (என்றும் கூறினார்)”

“பிரமுகர்களே! நிச்சயமாக என்னிடம் சங்கையான ஒரு கடிதம் போடப்பட்டுள்ளது” என்று (ஸபஃ இளவரசி) கூறினாள்.

“நிச்சயமாக அது சுலைமானிடமிருந்து வந்துள்ளது. அது, ‘பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர்ரஹீம்’ (அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையவனுமான அல்லாஹ் வின் பெயரால்  என ஆரம்பிக்கின்றது.)”

“நீங்கள் என்னிடம் ஆணவம் கொள்ளாதீர்கள். முஸ்லிம்களாகவே என்னிடம் வாருங்கள். (என்று எழுதப்பட்டுள்ளது.)”

“பிரமுகர்களே! எனது விஷயத்தில் நீங்கள் எனக்கு ஆலோசனை கூறுங்கள். நீங்கள் என்னிடம் நேரடியாகக் கருத்துச் சொல்லாத வரையில் எந்தவொரு விஷயத் தையும் முடிவு செய்பவளாக நான் இல்லை” என்று கூறினாள்.”

“அ(தற்க)வர்கள், ‘நாம் பலசாலிகளாகவும் பலமாகப் போராடக் கூடியவர்களாகவும் இருக்கின்றோம். முடிவு உம்மிடமே உள்ளது. எதை (எமக்கு) ஏவுவது என்பதை நீங்களே முடிவு செய்யுங்கள்” என்று கூறினர்.

“நிச்சயமாக அரசர்கள் ஒரு கிராமத்தில் நுழைந்தால், அதைச் சீரழித்து விடுவார்கள். அக்கிராமத்தவர்களில் கண்ணிய மிக்கவர்களை இழிவானவர்களாக ஆக்கி விடுவர். இவ்வாறே இவர்களும் செய்வார்கள்” என்று கூறினாள்.”

“நிச்சயமாக நான் அவர்களுக்கு ஒரு அன்பளிப்பை அனுப்பி, தூதர்கள் என்ன முடிவுடன் திரும்புகின்றனர் என்பதைக் கவனிக்கப் போகின்றேன் (என்றும் கூறினாள்)”

“அவர்கள் சுலைமானிடம் வந்த போது, ‘எனக்குப் பொருளைக் கொடுத்து நீங்கள் உதவப் போகிறீர்களா? அல்லாஹ் எனக்கு வழங்கியிருப்பது, அவன் உங்களுக்கு வழங்கியிருப்பதை விட மிகச்சிறந்ததாகும். எனினும் உங்கள் அன்பளிப்பைக் கொண்டு நீங்களே மகிழ்ச்சியடையுங்கள்’ என்று கூறினார்.”

“அவர்களிடம் திரும்பிச் செல்லுங்கள். அவர்களால் எதிர்கொள்ளமுடியாத படை களுடன் நிச்சயமாக நாம் அவர்களிடம் வந்து, அவர்கள் சிறுமையடைந்தவர்களாக இருக்கும் நிலையில் இழிவடைந்தவர்களாக, அதை விட்டும் அவர்களை நிச்சயமாக நாம் வெளியேற்றுவோம் (என்றும் கூறினார்)”

(27 : 20-37)

 

இந்த சம்பவம் இன்னும் நீண்டது. சுலைமான் நபியின் பறவைப் படையின் தளபதி ஹுத் ஹுத் பறவையை ஒரு நாள் அவர் காணவில்லை. அது சற்று தாமதித்து வந்தது. தனது தாமதத்திற்கான காரணத்தையும் அது கூறியது. சபா எனும் நாட்டைப் பற்றியும், அந்த மக்களை ஒரு பெண் ஆட்சி செய்வது பற்றியும் கூறியது. அவர்களுக்கு சகல வளங்களும் வழங்கப்பட்டிருக்கின்றது. ஆனால், அப்பெண்ணும் அந்நாட்டு மக்களும் சூரியனை வணங்குகின்றனர். அவர்கள் அல்லாஹ் ஒருவனை மட்டுமல்லவா வணங்க வேண்டும் என்று அந்தப் பறவை கூறியது.

அந்தப் பறவையின் உணர்வை நாம் பிள்ளைகளுக்கு ஊட்ட வேண்டும். அல்லாஹ் ஒருவன் மட்டுமே எச்சந்தர்ப்பத்திலும் வணங்கப்பட வேண்டியவன். சூரியனோ, சந்திரனோ, மண்ணோ அல்லது மரமோ வணக்கத்திற்குரியவை அல்ல. இவற்றையெல்லாம் படைத்த அல்லாஹ் ஒருவன் மட்டுமே வணங்கத் தகுதியானவன். இதை அந்தப் பறவை அறிந்து வைத்திருந்தது. மக்கள் சூரியனை வணங்குவதை அந்தப் பறவை கூட விரும்பவில்லை என்பதை விளக்க வேண்டும்.

பின்னர் சுலைமான நபி அந்தப் பறவை மூலம் ஸபா இளவரசிக்குக் கடிதம் அனுப்பி அந்தக் கடிதத்தை வைத்து அவர்கள் என்ன பேசுகின்றார்கள் என்பதை அந்தப் பறவை ஒட்டுக் கேட்டு அதை சுலைமான் நபியிடம் கூறியது. அந்தப் பறவை வழங்கிய தகவலின் படி சுலைமான் நபி செயற்பட்டு ஈற்றில் அந்த இளவரசி இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டதை இந்த அத்தியாயத்தின்(27) 38-44 வரையுள்ள வசனங்கள் விளக்குகின்றன.

அவற்றை விளக்குவதுடன் இஸ்லாத்தின் சத்திய கொள்கையில் உறுதியுடன் இருப்பதுடன் பிறருக்கும் இந்த சத்தியத்தை தெளிவுபடுத்துவதன் அவசியத்தை இந்த ஹுத் ஹுத் பறவையிடமிருந்து நாம் பாடமாகக் கற்றுக் கொள்ள வேண்டும் என்பதைப் புரிய வைக்கலாம்.

Search Videos

Video Share RSS Module

அல்லாஹுவிற்கே எல்லாப்புகளும்

Go to top